அண்மை செய்திகள்
ஐஎஸ்எல்: நடுவர்களின் முடிவுகளால் தொடர்ந்து பாதிக்கப்படும் சென்னையின் எப்சி
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து போட்டிகளும் கோவாவில் நடந்து வருகிறது. இரண்டு முறை பட்டம் வென்ற அணியும் கடந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணியுமான சென்னையின் எப் சி அணி இந்த முறை தங்களது பயணத்தை ஜாம்ஷெட்பூர் அணிக்கெதிராக வெற்றியுடன் தொடங்கினர். கேரளா பிலாஸ்டர்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறா விட்டாலும் சிறப்பாகவே விளையாடினர்.
அனிருத் தாபா (புகைப்படம்: ஐஎஸ்எல்)
இதனால் சென்னையின் எப் சி அணி தங்களது மூன்றாவது ஆட்டத்தில் அவர்களின் முக்கிய எதிரணியான பெங்களூரு எப் சி அணி எதிர்கொண்ட போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கேற்ப ஆட்டமும் பரபரப்பாக ஆரம்பித்தது. இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையான முயற்சியில் ஈடுபட பெங்களூரு எப் சி அணியின் ஆட்டமோ சிறிது அபாயமானதாக இருந்தது. குறிப்பாக சென்னை அணியின் முக்கிய வீரரான அனிருத் தாபா காயமடைந்து ஆட்டத்தில் இருந்து வெளியேறும் அளவிற்கு அவர்களது ஆட்டம் இருந்தது. ஆனால் இதில் முக்கிய அம்சமாக நடுவர் பெங்களூரு அணி வீரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தொடர்ந்து அவர் கொடுத்த அனேக முடிவுகளும் பெங்களூரு அணிக்கு சாதகமாகவே வழங்கினார். குறிப்பாக ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் சென்னையின் அணிக்கு கிடைக்க வேண்டிய நிச்சயமான பெனால்டி வாய்ப்பினை வழங்கவில்லை. இதன் மூலம் அவர்கள் அந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தனர்.
[embed]https://twitter.com/ChennaiyinFC/status/1337737827031810058[/embed]
மும்பை சிட்டி எப் சி அணிக்கெதிரான அடுத்த போட்டியில் தாபா இல்லாமல் களமிறங்கியது சென்னையின் அணி. வழக்கம் போல சிறப்பாக விளையாட துவங்கிய அணிக்கு பேரதிர்ச்சியாக தடுப்பாட்டக்காரர் சிபோவிச் காயமடைந்து வெளியேறினார். இருப்பினும் மனம் தளராமல் விளையாடி முதல் கோல் அடித்தனர் சென்னை அணியினர். ஆனால் இந்த போட்டியிலும் நடவரின் தீர்ப்புகள் சென்னையின் அணிக்கு எதிராகவே இருந்தது. இந்த போட்டியிலும் பெனால்டி வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆட்டத்தில் தோல்வி அடைந்தததோடு மற்றொரு இடியாக முன்கள வீரர் இஸ்மா காயமடைந்தார். போட்டி முடிந்த பின் அளித்த நேர்காணலில் நடுவரின் முடிவுகளை குறித்து கடுமையாக சாடியுள்ளார் அணியின் மேனேஜர் ஷாபா லாஸ்லோ. இந்நிலையில் இன்று நடக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது சென்னையின் எப் சி அணி.